தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய போது அங்கு அத்துமீறி நுழைந்த முன்னாள் எம்பி தளவாய் சுந்தரம் முக்கியமான சில ஆவணங்களை வெளியே எடுத்து வந்து அழிக்க முயற்சித்தார்.
வருமான வரித்துறையினர் துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் எம்பியுமான தளவாய் சுந்தரம் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு சில அமைச்சர்களுடன் சென்றார்.
அப்போது யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது காவல்துறை. ஆனால் அத்துமீறி அங்கு நுழைந்தார் தளவாய் சுந்தரம். வீட்டிற்குள் சென்று சில முக்கிய ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்து வந்து விஜயபாஸ்கரின் கார் டிரைவரிடம் கொடுத்தார்.
அதன் பின்னர் கார் டிரைவர் அதனை வெளியே நின்ற ஆதரவாளரிடையே மதில் சுவர் வழியே வீசினார். இதனால் அந்த ஆவணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்ற முடியவில்லை. விஜயபாஸ்கரின் கார் டிரைவர் தான் அதனை எடுத்துக்கொண்டு வந்து ஓடியதாக முதலில் தகவல் வெளியானது.
நன்றி: Sun News
ஆனால் அதனை எடுத்து வந்தது தளவாய் சுந்தரம் தான் என்பது தொலைக்காட்சிகளின் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. கையில் எதுவும் கொண்டு வராமல் வீட்டிற்குள் நுழையும் தளவாய் சுந்தரம் கையில் சில ஆவணங்களுடன் வெளியே வந்து மறைத்து கார் டிரைவரிடம் கொடுப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆவணத்தை அழிக்க உதவியதற்காக தளவாய் சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அவரது டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியும் இதனால் கேள்விக்குறியாகி உள்ளது.