40 நாட்களாக இருட்டில் கிடந்த கிராமம்; எல்லாம் ஒரு பறவைக்காக!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (09:08 IST)
புதுக்கோட்டை அருகே ஒரு சிறு பறவை குஞ்சு பொறிப்பதற்காக மொத்த கிராமமும் தெரு விளக்குகள் இன்றி இருட்டில் கிடந்த சம்பவம் தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை காப்பதன அவசியம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில் அதை செயல்பாட்டில் காட்டியுள்ளது தமிழக கிராமம். புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள சிறு கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் கறுப்பு ராஜா. அந்த கிராமத்தில் உள்ள தெரு விளக்குகளுக்கான மெயின் ஸ்விட்ச் போர்டு அவர் வீட்டின் அருகே உள்ளது. தினமும் மாலை அதை ஆன் செய்வதும்வ் விடியற்காலையில் அதை ஆஃப் செய்வதையும் ஒரு வழக்கமான சேவையாக செய்து வந்துள்ளார் கறுப்பு ராஜா.

சில நாட்களுக்கு முன்னர் அந்த ஸ்விட்சு போர்டில் நீல நிற பறவை ஒன்று கூடு கட்டியுள்ளது. மூன்று நீல நிற முட்டைகளை இட்ட அந்த பறவை அங்கேயே குஞ்சு பொறிக்க அமர்ந்துள்ளது. தெரு விளக்குகளை ஆன் செய்ய ஸ்விட்ச் ரூமை திறப்பதால் அது முட்டைகளை அடைக்காப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கிராமத்தினருடன் கறுப்பு ராஜா கலந்து பேச மொத்த கிராமமும் அந்த பறவை குஞ்சு பொறிக்கும் வரை தெரு விளக்கு இன்றி வாழ முடிவெடுத்துள்ளது. இதனால் 40 நாட்களாக இருளில் கிராமம் இருந்துள்ளது. பிறகு அந்த பறவை முட்டையிலிருந்து குஞ்சுகளை பொறித்துள்ளது. இதுகுறித்து கிராமத்தினர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட, தேசிய அளவில் பாராட்டுகள் குவிந்துள்ளது.

கிராம மக்களை நேரில் சந்தித்த மாவட்ட வன ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பறவை இந்தியா, பாகிஸ்தான், பூடான் பகுதிகளில் மட்டுமே காணப்படும் நீலநிற இந்திய ராபின் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்