”பாஜக ஒழிக” தமிழிசை மகனின் கோஷத்திற்கான காரணம் என்ன?

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (15:44 IST)
தனது மகன் பாஜக ஒழிக என கோஷமிட்டதற்கான காரணத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று அதேப்போல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குப் பின்னால் வந்த அவரது மகன் ‘பாஜக ஒழிக’ எனவும் பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டார். 
 
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதற்கான காரணத்தை தமிழிசை வெளியிட்டுள்ளார். தமிழிசை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 
அன்பின் அன்பான வணக்கம்,
 
நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். ஆனால், மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.தினேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா? என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார். இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது...
 
குடும்பத்தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது, குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள்தான் இவை. ஏன் ! அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்.
ஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது, மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்... அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்...
 
எந்தெந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்...
என் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும்…
இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்...
சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை…

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்