லட்சிய திமுக சார்பில் நவம்பர் மாதம் முதல் தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தமிழக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் என்று அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
லட்சிய திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது கூறுகையில் " தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செயலிழந்துவிட்டன என்றும் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விட, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்பதை முதலில் முடிவு செய்து அறிவிப்பேன் என்றும் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருக்க தற்பொழுது இருக்கும் அனைத்து கட்சிகளுமே பயப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட நமக்கு நாமே பயணம், திமுக கட்சியினரின் அவர்களுக்கு அவர்களே. முடியட்டும், விடியட்டும் என்ற பயணமாகும். எது முடியட்டும், எது விடியட்டும் என்பதை அடுத்த மாதம் நான் சொல்கிறேன் என்றும் வருகின்ற சட்டமன்றத்தேர்தலி்ல நாங்களும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வோம். அப்பொழுது, விஜயகாந்த் போல் எதுவும் பேசாமல் இருக்கமாட்டோம். கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் சட்டமன்றத்தில் பேசுவோம் என்று குறிப்பிட்டார்.
மேலும், லட்சிய திமுக சார்பில் நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் அப்பொழுது தமிழக மக்களின் குறைகளை கேட்டு அறிவேன் என்றும் டி. ராஜேந்தர் தெரிவித்தார்.