கட்டுக்கடங்காத கூட்டம் - தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (14:04 IST)
கூட்ட நெரிசலின் காரணாமாக பலர் காயமடைந்திருப்பதால் தொண்டர்கள் கலைந்து செல்ல ஸ்டாலின் தொண்டர்களிடம் வற்புறுத்தியுள்ளார். 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கும் வரை அவரின் இறுதி ஊர்வலம் செல்ல இருக்கிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜாஜி ஹாலில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து வருவதனால் போலீஸார் திணறி வருகின்றனர். கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்துள்ளனர்.
 
இதனையடுத்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய ஸ்டாலின், தொண்டர்கள் இங்கிருந்து கலைந்து சென்றால் தான், 4 மணிக்கு கலைஞரின் இறுதி ஊர்வலம் திட்டமிட்ட படி நடைபெறும். யாரும் சுவர் ஏறி குதித்து அஞ்சலி செலுத்த முற்படவேண்டாம்.
 
உங்களது சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன், உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என செயல்தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்