ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப் படுகொலை: நடை பயணத்தின்போது கொடூரம்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (11:13 IST)
சென்னை திருமழிசை அருகே ஊராட்சி தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பி.எஸ்.கோல்டு என்கிற பி.எஸ்.தங்கராஜ் (49). இவர், மேல்மனம்மேடு ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சேம்பர் தொழில் நடத்தி வருகிறார்.
 
நேற்று அதிகாலை தங்கராஜ் தனது நண்பர்களுடன் பட்டாபிராம் சாலையில் நடைப்பெயற்சி சென்றுகொண்டிருந்தார். அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த 6 பேர் வந்த கும்பல் அவர்களை வழி மறித்து, தங்கராஜை மட்டும் தாக்கியுள்ளனர்.
 
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த வெள்ளேடு காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
 
தங்கராஜ் கொலை செய்யப்பட்டது பற்றி தெரிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளவேடு காவல் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். காவலர்கள் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 
கொலையுண்ட தங்கராஜ் 2 முறை ஊராட்சி தலைவராக இருந்து உள்ளார். தற்போது மேல்மனம்பேடு ஊராட்சி தலைவர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் தங்கை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தார்.
 
இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்