எனக்கு அப்படி ஒரு விளம்பரம் தேவையில்லை : காவிரி விவகாரத்தில் சிம்பு விளக்கம்

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:23 IST)
காவிர் நீர் விவகாரத்தில் விளம்பரம் தேடும் ஆள் நான் அல்ல என்று நடிகர் சிம்பு கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் ‘கர்நாடகாவில் இனி என் படத்தை திரையிடமாட்டேன்’ என்று நடிகர் சிம்பு கூறிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்தி உலா வந்தது.  பலர் அவரை பாரட்டி.. தமிழண்டா.. கெத்துடா.. என்கிற ரேஞ்சில் கருத்துகளை கூறினார்கள்... 
 
‘பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னன்யா.. அவன்தான் தமிழன்’ என்று அனல் பறக்கிறது.
 
ஆனால், தான் அப்படி எதுவும் கூறவில்லை சிம்பு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் தற்போது தாய்லாந்து நாட்டில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து கேள்விப்பட்டேன்.
 
இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவிரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.
 
சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை மற்றும் இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதேபோல், நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.
 
இந்த பிரச்சனையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்