தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் செல்போன் வழியாக பேசி வரும் சசிக்கலா தமிழக மக்களுக்காக சிறையிலேயே விரதம் இருந்ததாக பேசியுள்ளார்.
அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தேனியை சேர்ந்த கண்ணன் என்ற தொண்டரிடம் பேசிய சசிக்கலா “கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மோசமான நிலைக்கு சென்ற கட்சியை நான் இருக்கும் வரை சரி செய்வேன். பெங்களூர் சிறையில் நான் 4 வருடமாக இருந்தாலும் என் உயிர் தமிழக மக்களையே சுற்றி வந்தது. தமிழக மக்களுக்கு கொரோனா வந்துவிட கூடாதே என நான் செய்யாத பூஜை கிடையாது. மாதக்கணக்கில் விரதம் கூட இருந்தேன்” என பேசியுள்ளார்.