பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வர உள்ள சசிகலா சிறையில் இருந்து நேராக ஜெயலலிதா சமாதிக்கு செல்ல உள்ளதாகவும், அங்கு தியானம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மனு அளிக்கப்பட்டது.
அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை.
இந்த தடையில்லா சான்றிதழ் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்று அளித்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா பரோலில் வெளிவருவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா நேற்று மாலையோ அல்லது நாளை காலையோ பரோலில் வெளிவரலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இன்று காலை வருவார் என சசிகலா தரப்பு புகழேந்தி கூறியுள்ளார். இதனையடுத்து பெங்களூர் சென்றுள்ள தினகரன் சென்னை வர உள்ள சசிகலாவை எங்கு தங்க வைக்கலாம் என ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் சசிகலாவின் பரோல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை. நேற்று விடுமுறை என்பதால் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படவில்லை. இன்று கண்டிப்பாக பரோல் கிடைத்துவிடும் என தெரிவித்தார். இதனையடுத்து சசிகலாவை நேரில் சென்று அழைத்து வர பெங்களூர் சென்றுள்ள டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹாராவில் இருந்து கார் மூலமாகவே சென்னைக்கு சசிகலாவை அழைத்து வருகிறார்.
சென்னைக்கு வந்ததும் சசிகலா முதலில் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சமாதியில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே கணவர் நடராஜன் இருக்கும் மருத்துவமனைக்கே சசிகலா செல்ல இருக்கிறாராம். பரோலில் வரும் சசிகலா சிறுதாவூர் அல்லது தி-நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கலாம் என தகவல்கள் வருகின்றன.