அதிமுக அடையாள அட்டையே சசிகலாவிடம் இல்லையாம்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (11:31 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தான் வரவேண்டும் என அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.


 
 
தினமும் அதிமுகவின், மூத்த நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து கட்சியின் தலைமையை ஏற்று வழிநடத்த வேண்டும் என வற்புறுத்துவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் சசிகலா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என உண்ணாவிரதம் கூட இருந்தனர்.
 
அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலா தான் அம்மாவின் வாரிசு என ஆதரம் கூட காட்ட ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் உதயகுமார் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என கூறிவருகிறார். அவரக்கு ஆதரவாக அதிமுகவினரால் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வருகிறது.
 
ஆனால் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக முடியாது என அதிமுக சட்ட விதி கூறுகிறது. ஒருவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆகவேண்டுமானால் அவர் குறைந்தது 5 வருடம் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சட்ட விதி உருவாக்கி வைத்துள்ளார்.
 
ஜெயலலிதாவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சசிகலா மீண்டும் அவரால் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு 5 வருடங்கள் நிறைவடையவில்லை என்பதால் அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆகமுடியாது என கூறப்பட்டது. ஆனால் சசிகலாவுக்காக அதிமுக சட்ட விதியை கூட மாற்றக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டனர் அதிமுகவினர்.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு அதிமுக அடையாள அட்டை கூட இல்லை என்ற தகவலும் வந்துள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகை நமீதாவுக்கு கூட ஜெயலலிதா அதிமுக அடையாள அட்டையை வழங்கியுள்ளார் ஆனால் சசிகலாவுக்கு ஜெயலலிதா அதிமுக அடையாள அட்டையை வழங்கவில்லை என்ற தகவல்கள் வருகின்றன.
 
மேலும் கடந்த கடந்த ஜூன் 18-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுவை கூட்டினார் ஜெயலலிதா. அதில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. அவர் செயற்குழு உறுப்பினராக கூட இல்லை என்கிறது சமீபத்திய தகவல்கள்.
 
அடுத்த கட்டுரையில்