ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பபெறக்கூடிய திட்டம் அதாவது, அதன் விலை மீது மேலும் 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்துவிட்டு, பாட்டில்களை திரும்பத்தரக்கூடிய வாடிக்கையாளருக்கு 10 ரூபாயை திருப்பி அளிக்கக்கூடிய திட்டமானது அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 12 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 12 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், முடிவுகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ. 306. 32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு ரூ.297.12 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மீதமுள்ள 9 கோடி ரூபாய் தனிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், 12.62 கோடி ரூபாய் தொகை குறித்த விவரங்கள் தெளிவாக இல்லாததால், விரிவான, தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.