ஸ்டெர்லைட் துயரம் ; யார் காரணம்? : அரசு செய்ய தவறியது என்ன?

Webdunia
புதன், 23 மே 2018 (11:31 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில்தான், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர்.  அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  
 
அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 11 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறையை அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.

 
தங்களின் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக 100 நாட்களாக போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் எந்த அளவிற்கு  கோபமாக இருந்திருப்பார்கள் என்பதை அரசு உணர்ந்திருக்க வேண்டும். இவ்வளவு மக்கள் ஒன்றாக கூடுவார்கள். பேரணியில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. யாரும் எதையும் உணரவில்லை.
 
நடைபெறப் போகும் போராட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் நிச்சயம் முதல்வருக்கு அறிக்கை கொடுத்திருப்பார்கள். அதனால்தான் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே, உயர் அதிகாரிகளை அழைத்து போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை முடிக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால், முதல்வர் செய்யவில்லை. 

 
அதை விட முக்கியம், இத்தனை நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அவர்கள் மன வலிகளையும், ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆலை கண்டிப்பாக செயல்படாது என்கிற உத்தரவாதத்தை அரசு அளித்திருந்தால் மக்கள் ஏன் ஒன்று கூடி போராடுகிறார்கள்?
 
குறிப்பாக துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது ஐஜி அல்லது டிஐஜி போன்ற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லை. மக்கள் போராட்டம் தீவிரமாக மாறிய போது, சட்ட ஒழுங்கள் கூடுதல் டிஜிபியோ, டிஜிபியோ ஒரு முறை கூட நேரில் சென்று உண்மை நிலையை ஆராயவில்லை. இது அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. இந்த அலட்சியத்தால்தான் 11 உயிர்கள் பலியாகியிருக்கிறது.

 
அதுசரி.. அனுமதி கொடுத்தவர்கள் எப்படி மக்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்?
 
வழக்கம் போல் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலையும் தருகிறோம் எனக்கூறி அமைதியாகி விட்டது அரசு. மேலும், இந்த சம்பவம் தவிர்க்க முடியாதது. வன்முறை எதற்கும் தீர்வாகாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்து விட்டார். வன்முறை கட்டுக்குள் கொண்டுவரவே துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாயிற்று என காவல் துறையும், முதல்வர் எடப்பாடி தரப்பிலும் கூறப்பட்டு விட்டது. மேலும், இதுபற்றி விசாரிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுவிட்டது. 
 
இவ்வளவுதானா? ஒரு அரசின் கடமை காரணம் கூறுவதிலும், காசு கொடுப்பதிலும் முடிந்து விடுகிறதா?
 
அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்