தொழில் அதிபர் கொலைக்கு காரணம் வேறு - விசாரணையில் அம்பலம்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (10:38 IST)
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையான காரணம் தெரிய வந்திருக்கிறது.

 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினியின் தங்கை மருமகன் சிவமூர்த்தி என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இவ  திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தார். அவரின் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள ஒரு ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், போலீசாரின் விசாரணையில் அதில் உண்மையில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
இந்த வழக்கில் சிவமூர்த்தியின் நண்பர் விமல், கூலிப்படையை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் வெளிவந்த தகவலானது:
 
சிவமூர்த்திக்கும், விமலுக்கும் தொழில் ரீதியான தொடர்பு இருந்துள்ளது. விமலுக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டது. எனவே, சிவமூர்த்தியிடம் அவர் பணம் கேட்டுள்ளார். ஆனால், சிவமூர்த்தி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே, அவரை கடத்தி அவரின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்கலாம் என விமல் திட்டமிட்டுள்ளார்.

 
அதற்காக கூலிப்படையை சேர்ந்த சிலரோடு விமல் மூன்று மாதங்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டியுள்ளார். சுற்றுலா செல்வது போல் சிவமூர்த்தியை அழைத்து சென்று திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், சிவமூர்த்திக்கு நேரம் இல்லாததால், அவர்களின் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.  
 
எனவே, கடந்த 20ம் தேதி தொழில் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி சிவமூர்த்தியை விமல் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, கூலிப்படையினரோடு சேர்ந்து அவரின் வாய், மூக்கு, கை, கால் என அனைத்தையும் கட்டி காரில் கொண்டு சென்றுள்ளார். இதனால், மூச்சு விட சிரமப்பட்டு சிவமூர்த்தி பரிதாபமாக பலியானார். 
 
இதனால், அதிர்ச்சியைடந்த கூலிப்படையை சேர்ந்த ஒருவர் பாதியிலேயே சென்றுவிட்டார். விமல், கூலிப்படையினர் 2 பேர் என மொத்தம் 3 பேரும் சிவமூர்த்தியின் உடலை வைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் காரிலேயே பட இடங்களுக்கும் சுற்றியுள்ளனர். அதன் பின் அவரின் உடம்பில் கல்லைக்கட்டி ராமேஸ்வரம் அருகில் உள்ள ஏரியில் வீசிவிட்டனர். அதன் பின்புதான் போலீசாரின் வாகன சோதனையில் அவர்கள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 
விமல் உள்ளிட்ட மூவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்