பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தங்களின் கோரிக்கை மனுவை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்த ராம்குமார் தந்தை தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ராம்குமார் சிறையிலேயே மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை நீதிமன்றத்தை அனுகினார்.
மேலு, ராம்குமார் உடலை பரிசோதனை செய்யும்போது தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டுமென ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரரின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை அனுமதித்தால், எல்லோரும் இதே போல கோரிக்கை விடுக்கக்கூடும் என அரசுத் தரப்பு கூறியது.
இதனால், மனு மீது முடிவெடுப்பதில் இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.
அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், ராம்குமார் தந்தை தரப்பு கோரிக்கையை நிராகரித்தார்.
இந்நிலையில், தனியார் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இன்று தலைமை நீதிபதியிடம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தங்களின் கோரிக்கை மனுவை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்த ராம்குமார் தந்தை தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.