கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி!

வியாழன், 17 அக்டோபர் 2019 (07:58 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. அதன் பின்னரும் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருவதால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளது 
 
இந்த நிலையில் திருவண்ணாமலையில் தொடர் மழை காரணமாக புறவழிச்சாலையில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மழைநீர் வீடுகளுக்கு புகும் இந்த நிலைக்கு திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது 
 
அதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், சன்னாநல்லூர், திருவாரூர், கச்சனம், ஆலத்தம்பாடி, மாங்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை, தேத்தாக்குடி, செம்போடை ஆகிய பகுதிகளிலும், தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியிலும் நேற்று மாலை கனமழை பெய்தது.
 
மேலும் திருப்பூர் மாவட்டம், நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்தது மட்டுமின்றி விவசாயத்திற்குப் பேருதவியாக இந்த மழை இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்