பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் கைதியை வெட்டி கொலை செய்த வாலிபர்கள்

Webdunia
புதன், 21 ஜனவரி 2015 (08:18 IST)
பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட வரதன் என்ற கைதியை, பட்டப்பகலில் 2 வாலிபர்கள் சேந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
 
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 34 வயதுடைய வரதன் என்ற வரதராஜன். கடந்த 2010 ஆம் ஆண்டு பூந்தமல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கத்தில் முருகன் என்பவரது மனைவியை கிண்டல் செய்தபோது தகராறு ஏற்பட்டது.
 
அப்போது முருகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 3 ஆவது குற்றவாளியாக வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் வரதன் மீது உள்ளது.
 
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு கைவிலங்கு போடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் வரதன் அழைத்து வரப்பட்டார்.
 
மதியம் 2 மணியளவில் காவல்துறை வேனில் இருந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக வரதனை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
 
அப்போது முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாதுகாப்பையும் மிறி, 2 வாலிபர்களும் சேந்து வரதனை சரமாரியாக வெட்டினர்.
 
இதில் வரதனின் தலையின் பின் பகுதி மற்றும் தொண்டை பகுதியில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது, இதனால் அவர் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த வரதனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதன் உயிரிழந்தார்.
 
இதையடுத்து அம்பத்தூர் துணை ஆணையர் மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெசப்பாக்கத்தில் அதிமுக வட்டச் செயலாளர் விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்டார். விஸ்வநாதனின் தங்கை குமுதாவை, வரதன் திருமணம் செய்துள்ளார்.
 
கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சொத்து தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
 
மேலும், இது குறித்து சமீபத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யாரெல்லாம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்கள் என்ற பட்டியலையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
 
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த நீதிமன்ற வளாகத்தில் கைதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.