சாதாரண குடிமகனுக்குக் கூட உயிருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் ரத்த உறவுகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு இரு கால்களும், பற்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் அதற்கான அனுமதியை மருத்துவமனை நிர்வாகம் யாரிடம் பெற்றது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளிடம் பெற்றதா? அல்லது தமிழக அரசிடம் பெற்றதா? என்பது குறித்து இன்று வரை விளக்கம் அளிக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் ரெட்டி நவம்பர் மாதம் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் போது வீடு திரும்பலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அப்படியானால், ஜெயலலிதா குணடைந்திருந்த காலத்தில் மருத்துவர்களுடனோ, மற்றவர்களுடனோ உரையாடும் காட்சிகளையோ, மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் காட்சிகளையோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அப்பல்லோ நிர்வாகம் அதை செய்யாதது ஏன்? அதுமட்டுமின்றி, சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தாலே நோயாளியின் உடல் மெலிந்து எடை பெருமளவில் குறைந்து விடும். ஆனால், ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும் அவரது உடல் மெலியவோ, எடை குறையவோ இல்லை என்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.