சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் நடுவானில் சிகரெட் பிடித்து ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென தனது பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரை புகைப்பிடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் தன்னால் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது என கூறிய அந்த நபர் தொடர்ந்து புகை பிடித்துள்ளார். விமான சிப்பந்திகள் சொல்லியும் அவர் கேட்காமல் புகை பிடித்ததால், இதுகுறித்து சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து விமான ஓடுதளத்தில் தயாராய் இருந்த விமான நிலைய அதிகாரிகள், காவலர்கள், விமானம் தரையிறங்கியதும் நடுவானில் ரகளை செய்த அந்த நபரை கைது செய்து விசாரணை செய்துவிட்டு சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூரை சேர்ந்த சேவியர் என தெரிய வந்துள்ளது.