தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மலை போயஸ் கார்டன் சென்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். ஜெ.வின் தோழி சசிகலா, அதிமுக கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பன்னீர் செல்வத்திற்கும், சசிகலாவிற்கும் இடையே பனிப்போர் நிகழுவதாகவும், சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன் ராவ் ஆகியோரிடம் நடத்தப்பட வருமான வரி சோதனைக்குப் பின்னால் கூட ஓ.பி.எஸ் தான் இருக்கிறார் என செய்திகள் வெளியானது.
மேலும், மத்திய அரசின் ஆதரவு ஓ.பி.எஸ்-ற்கு மட்டும்தான் என மத்திய அமைச்சர் வெங்கய நாயுடு வெளிப்படையாகவே பேட்டியளித்தார். இதனால் மன்னார்குடி வட்டாரம் ஓ.பி.எஸ் மேல் கோபமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று பிரதமர் மோடியை, ஓ.பி.எஸ் சந்தித்து விட்டு திரும்பிய பின் இதுவரை அவர் போயஸ் கார்டன் பக்கம் செல்லவில்லை.
இந்நிலையில், இன்று மாலை அவர் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பேசியதாக தெரிகிறது.