தூக்கில் தொங்குவது போல் காதலிக்கு ‘செல்பி’ அனுப்பி விட்டு மாணவர் தற்கொலை

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (10:30 IST)
தூக்கில் தொங்குவது போல் ‘செல்பி’ எடுத்து வாட்ஸ் அப்பில் மாணவிக்கு அனுப்பிவிட்டு மாணவர் ஒரு தற்கொலை செய்து கொண்டார்.
 
கோவை சிங்காநல்லூரில் வசிப்பவர் சத்தியசீலன். பெயிண்டர். இவருடைய மகன் ஹரிகரசுதன் (வயது 20). இவர் கோவை ஈச்சனாரியில் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்த நிலையில் ஹரிகரசுதன் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாராம்.  அண்மையில் அந்த மாணவியிடம் தனது காதலை ஹரிகரசுதன் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஹரிகரசுதன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவை மாணவிக்கு தெரிவிக்க நினைத்தார்.
 
உடனே வீட்டின் உள்ள ஒரு அறையில் தாழிட்டு கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டார். பின்னர் மாணவர் தூக்கில் தொங்குவது போல ‘செல்பி‘ எடுத்துள்ளார். அதனை மாணவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினார்.
 
பின்னர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய அவரது தாயார் சாவித்திரி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். 
 
இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மறைக்க அனுப்பி வைத்தனர். 
 
ஒருதலை காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்