ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் அத்துமீறி மணல் கொள்ளை: நல்லக்கண்ணு அதிரடி பேட்டி

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (14:51 IST)
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், கோம்பு பாளையம், தோட்டாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு மணல் எடுக்க புதிதாக குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 

 
அங்கு புதிய மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர், தளவாப்பாளையம் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
 
இதனிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தேமுதிக தொழிற்சங்க நிர்வாகி பொன் இளங்கோவன், உள்ளிட்ட ஏராளமான மணல் குவாரிக்கு சென்றனர்.
 
ஆனால், வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, தளவாப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் நல்லக்கண்ணு, இயக்குனர் உள்பட சுமார் 400 பேரை கைது செய்தனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, ”கரூரில் உள்ள மணல் குவாரிகளில் அத்துமீறி செயல்பட்டு வரும் பாஸ்கர் என்பவர் நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உறவினர் என சொல்லிக் கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. பாஸ்கர் என்பவர், அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உறவினர் என்பது உண்மையாக இருந்தால், அவரை அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
 
தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை மணல் கொள்ளை தாராளமாக நடந்து வருகிறது. இதை கட்டுப் படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆறுகள் நஞ்சாகி, எதிர்காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.” என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்