2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக இடையேயான கூட்டணி வேட்பாளர்கள் மதுரை முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மதுரையில் போட்டியிடவுள்ள அதிமுக,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த பிரச்சார பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மதுரை பாண்டி கோயில் பகுதியிலுள்ள அம்மா திடலில் நடைபெற உள்ளது.
எனவே பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ,ஆர் பி உதயகுமார் மற்றும் பாஜக சார்பில் வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன்,பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.