சென்னையில் தற்போது பெய்து வரும் மழை தான் வடகிழக்கு பருவ மழையின் கடைசி மழையாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
மேலும், அடுத்த சில மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பதிவில் சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழை படிப்படியாக குறைந்து விடும் என்றும் அனேகமாக வடகிழக்கு பருவமழையின் கடைசி மழையாக சென்னைக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மழை படிப்படியாக குறைந்து முழுமையாக இன்னும் சில நாட்களில் நின்று விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.