தமிழகத்திற்கு நடராஜனும் உமையாளுமே சாட்சி

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (12:55 IST)
அதிமுக  திமுக  தலைமைகளின்  சுகவீனங்கள்   தமிழகத்தை  மிகப்பெரிய  அளவில் பாதித்து  வருகிறது. முதல்வர்  ஜெயலலிதா  பெங்களூரு சிறையில்  இருந்த  21 நாட்களும் களப்பிரர்களின்  இருண்ட  காலம் போன்றது. அந்த   நாட்களில்  அரசு செயல்பட்டதா  என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. பல  திட்டங்களின்   தொடக்க  விழாக்கள் அனைத்தும்  நிறுத்தி வைக்கபட்ட காலம். முதல்வர்  ஜெயலலிதா  பெங்களூரு  சிறையில் இருந்த  காலம், எம்.ஜி.ஆர்  மருத்துவமனையில்   இருந்த  காலகட்டத்தை   விட  சற்றே கடினமான சூழ்நிலை தமிழகத்தில்  நிலவுகிறது.


 

 
முதல்வர்  மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டு   இன்றுடன்  41  நாட்கள்  நிறைவடைந்த நிலையில், தமிழக  அரசு  மத்திய  அரசின்  உதய் திட்டத்திற்கும் , தேசிய  உணவு  பாதுகாப்பு சட்ட திட்டத்திற்கும்  மிகப்பெரும் விலைகளைக்  கொடுத்து  சமரசம்  செய்து  இருக்கிறது. எம்.ஜி .ஆர் மருத்துவமனையில்  இருந்த  போது   அப்போதைய  சுகாதாரத்துறை  அமைச்சர் ஹெக்டே  தினம்  பத்திரிகைகளுக்கு  முதல்வர்  நலம்  குறித்து  செய்திகள் தருவார். வீரப்பன், நெடுஞ்செழியன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் களம் கண்ட  நேரம்  அது.
 
ஆனால்  இன்று   ஓ.பன்னீர்செல்வம்  அதிகாரம்  படைத்தவரா ?  எடப்பாடி பழனிச்செல்வம் ரேஸில்  முந்துகிறாரா? சசிகலா  புஷ்பாவிற்கும்  சசிகலா நடராஜனுக்கும்  இன்று  என்ன கருத்து  மோதல்கள் என ஊடகங்கள் சொல்லிக்கொண்டு  இருக்கின்றன. முதல்வர் டெல்லிக்கு  சிம்ம சொப்பனமாக  திகழ்ந்தவர். ஆனால்  இன்று  டெல்லி  பல  கில்லி  வேலை செய்து  கொண்டிருக்கிறது. அந்த  வேலைகளின்  வெளிப்பாடு  தான்  உதய்  மற்றும்  தேசிய உணவு  பாதுகாப்பு  சட்ட  திட்டங்களுக்கான  தமிழக அரசின்  சமரசம்.
 
ஒரு  தேசிய  கட்சியின்   தமிழக  முதல்வரை  செயலற்றவர்  என்று அதிகாரபூர்வமாக அறிவித்து, முதல்வரின்  துறைகளை ஓ.பி .எஸ்க்கு, கவர்னர்  மாற்றியது  விவாதத்திற்கு உள்ளானது. தேரோட்டி  சற்றே  களைப்பாறிக்  கொண்டிருக்கிறார்,  லகான்  யார்  கையில்? இந்த   குதிரையின்  லகானை  செலுத்த  பெயரளவில்  அதிகாரம் பெற்றவர்கள்  கவர்னரும் ஓ .பன்னீர்செல்வமும். ஆனால்  குதிரையின் லகானை  செலுத்த  உண்மையான  அதிகாரம் பெற்றவர்  யார் என்பதை நடராஜர் ஒருவர்   மட்டுமே  அறிவார்.
 
முதல்வரின்  உடல் நலத்தால்   தமிழகத்தின்  வரலாறு   இருண்டதாக சரித்திரம் வேண்டாம். துரதிர்ஷ்டவசமாக   திமுகவைப் போல்  அதிமுக வில்  இரண்டாம்  கட்டத்  தலைவர்கள் அளவில்   செல்வாக்கு  பெறவில்லை.  இந்த  நேரம் அதிமுகவிற்கு  மட்டுமல்ல தமிழகத்திற்கும் கஷ்டமான  காலம். கரணம்  தப்பினால்  மரணம்  என்பதை  அந்த நடராஜரும்  அறிவார்.  ஆனால்   நின்று   செயல்  பட  வேண்டிய  களம் இது.
 
வட  கிழக்கு   பருவ  மழை  ஆரம்பித்து  விட்டது.  பொறுப்புகளும் செயல்பாடுகளும்  அதிகம் ஆகி  விட்டது.  எதிர்க் கட்சிகள்   எல்லாம் லகானுக்கு  ஆசைப்பட   ஆரம்பித்து  விட்டது. நேற்றைய  நண்பர்கள் இதுவரை  வந்து  சந்திக்கவே  இல்லை.  நேற்றைய  எதிரிகள்  நேரில் வந்து அன்பை  பரிமாறிக்  கொண்டனர். காலம்  அனைவருக்கும்  அனைத்தையும் தருவது அல்ல. அதிகாரம்  படைத்தவர்கள்   உத்தரவுகள்  எல்லாம் செயலாக்கம்  பெறுவது  இல்லை. யாருடைய  உத்தரவுகள்  செயலாக்கம் பெரும்  என்பதில்  தான்  வெற்றி  உள்ளது. வடகிழக்கு பருவமழை  மிரட்டும் இந்த  நேரத்தில்  யாருடைய  உத்தரவுகள்  செயலாக்கம்  பெரும்  என்பதை நடராஜர்  ஒருவரே  அறிவார்.
 
சாரதி  ஓய்வில்  உள்ள  நிலையில்,  குதிரையின்  லகானை  இயக்குவது  யார்  என்பது நடராஜர்  ரகசியமாகவே  இருக்கட்டும். ஆனால்  சாரதி அளவிற்கு   ரதத்தை  சிறப்பாக செலுத்த   முடியவில்லை  என்றாலும்   ரதத்தை  இயக்க   வேண்டிய  கட்டாயத்தில் லகானை  செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். அது  அவர்களின்  கடமையும்  கூட. இந்த கட்டாயத்திற்கும் கடமைக்கும்  இடையே  நின்று  காலபைரவன்  தமிழகத்தின் வரலாற்றை எழுதிக்   கொண்டிருக்கிறான் . அதற்கு  அந்த  நடராஜனும்  அவரில்  தன்னைப் பாதியாகப் பெற்ற  உமையாளுமே  சாட்சி.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை
அடுத்த கட்டுரையில்