தனக்கு திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் பெற்ற தாயை கத்தியால் குத்தியும், தீ வைத்து எரித்தும் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் மாங்காளி நகரைச் சேர்ந்தவர் சசிகலா. இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணியாற்றி வந்தார். கணவரை இழந்த இவருக்கு, 3 மகன்கள்.
மூத்த மகன் அமர்நாத் பிரசாத் டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மற்றொரு மகன் ஆனந்த். இவருக்கு திருமணமாகி அதே பகுதியில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். மற்றொரு மகன் விபத்தில் இறந்து விட்டார்.
இந்நிலையில், அமர்நாத் பிரசாத், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தாயிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கு இடையில், வேலைக்குச் சென்ற இடத்தில் சசிகலா தவறி விழுந்தார். இதனால், அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.
எனவே, எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அத்துடன், வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது தாய் சிரமப்படுவதையும் எண்ணிப் பார்க்காமல். சசிகலாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு அமர்நாத் பிரசாத் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், வழக்கம் போல் தனது தாயிடம் அமர்நாத் பிரசாத் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், படுக்கையில் இருந்த சசிகலாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார்.
இதை கண்டு கொள்ளாத அவர் மேலும், ஆத்திரமடைந்து தனது தாயின் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்துள்ளார்.
இதனால் சசிகலா அலரித்துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்து பயந்து போன அமர்நாத் பிரசாத் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
எரியும் தீயுடன் உயிருக்குப் போராடியபடி, அலறித் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை, மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய அமர்நாத் பிரசாத்தை தேடி வருகின்றனர்.