சர்வதேச போட்டியில் பங்குபெற மாணவருக்கு உதவிய எம்.எல்.ஏ - வீடியோ

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (16:17 IST)
சர்வேதச போட்டியில் பங்கேற்கும் மாணவரின் விமான பயணத்திற்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உதவியுள்ளார்.

 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பத்தாம்பட்டி பகுதியில் வசிக்கும், வேலுச்சாமி – செல்லம்மாள் தம்பதியினரின் மகன் பழனிச்சாமி (வயது 20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 4ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். 
 
வரும் மார்ச் மாதம் 4 மற்று 5ம் தேதிகளில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற உள்ள சர்வதேச கைப்பந்து போட்டியில் ஜூனியர் போட்டியில் (21 வயதிற்குட்பட்ட) இந்தியாவில் இருந்து செல்லும் வீரர்களில் தமிழக வீரர்கள் 6 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் பழனிச்சாமியும் ஒருவர். அந்த போட்டியில் கோல் கீப்பராக விளையாட பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், ஏழை என்பதால், விமான செலவு மற்றும் இதர செலவுகளுக்கு இந்த இளம் வீரருக்கு உதவ யாரும் இல்லை.
 
இந்த விஷயம் அறிந்த அதே தொகுதி எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன், தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலை செய்து வந்த, பழனிச்சாமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து, அந்த வீரருக்கு பாராட்டுகள் தெரிவித்ததோடு, அந்த இளம் வீரருக்கு விமான பயணத்திற்கு தேவைப்படும் நிதியளித்து, பாராட்டுகளையும் தெரிவித்து அவரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 
 
முன்னதாக, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடமும், இந்த விஷயத்தை எடுத்துக் கூறி, அவரது சார்பிலும் நிதியுதவி கொடுக்கப்பட்டது. சாதாரண கவுன்சிலர் கூட, காரை விட்டு இறங்காத தற்போதைய அரசியலில், ஒரு எம்.எல்.ஏ, தனது தொகுதி மாணவர், ஒரு இளம் வீரர், சர்வதேச அளவில், இந்தியாவிற்காக விளையாட உள்ளதையறிந்து, அந்த மாணவரின் வீடு தேடி சென்று பாராட்டு தெரிவித்ததோடு, அந்த மாணவருக்கு உதவிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்