பெண்களின் முன்னேற்றம் மற்றும் சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பெண்களின் உரிமை மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்களையும் பலர் நடத்துகின்றனர். இன்று மகளிர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு சிறப்பு கொள்கைகளை வெளியிட உள்ளது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இந்த மகளிர் தினம் அமையட்டும். பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.