ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி - பொங்கி எழுந்த ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (16:08 IST)
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.  


 

 
மேலும், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு நெஞ்சுவலி என்று கூறி, மருத்துவமனையில் சேர்ந்தார் ராம் மோகன் ராவ். அந்நிலையில் அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராகப் பதவியேற்றார்.  
 
அந்நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஊழல் புகாரில் சிக்கியவருக்கு தமிழக அரசு மீண்டும்  பதவி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் “ ராம மோகன ராவ் தலைமை செயலாளராக இருந்த போது, அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு சென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது பதவியும் பறிக்கப்பட்டது.  தற்போது அவருக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட்டுள்ளது.  கட்டி கட்டியாக தங்கத்தையும், பணத்தையும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டிக்கும், ராம மோகன ராவிற்கும் இடையே தொடர்பு இருந்ததாக அப்போது செய்திகள் வெளியானது. அதுபற்றி தமிழக அரசு விளக்க வேண்டும்.  மேலும், அவருக்கு மீண்டும் பதவி அளிக்க எனன் நிர்பந்தம் அளிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த கட்டுரையில்