தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (10:13 IST)
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்வதாகவும் அவர் இன்று மாலை மத்திய நிர்வாக துறை அமைச்சர் சிஆர் பாட்டில் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காவிரி மற்றும் உள்ளே பெரியாறு அணை விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு சாதகமான சூழல் குறித்து மத்திய நிர்வாக துறை அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் காவிரியில் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவதில் பல ஆண்டு காலம் பிரச்சனை இருந்து வருகிறது என்பதும் மத்திய அரசால் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு நடுவர் மன்றம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் அந்த உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பதால் நீதிமன்றம் வரை வழக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மழை பெய்தால் மட்டுமே உபரி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டு வருகிறது என்பதும் மழை பெய்யாத நேரத்தில் தண்ணீர் திறப்பது இல்லை என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று  தருவதற்காக துரைமுருகன் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்