மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: இளங்கோவன் வலியுறுத்தல்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (14:20 IST)
மெட்ரோ ரயில் கட்டணத்தை  உடனடியாக குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்த காலத்தில் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
 
முதற்கட்டமாக அன்றைய தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முயற்சி எடுத்தது. சென்னை மாநகரின் மக்கள் தொகை 75 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொலைநோக்கு பார்வையோடு அன்று எடுக்கப்பட்ட முயற்சி இன்றைக்கு பலன் தருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
சென்னை கோயம்பேடு முதல் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
தமிழகத்தின் நலன் சார்ந்து அன்று மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மொத்த முதலீடான ரூ.14,685 கோடியில் ரூ.3,672 கோடி நிதியை (25 சதவீதம்) ஒதுக்கியதோடு, தமிழக அரசு ரூ.2423 கோடி (16.5 சதவீதம்) ஒதுக்கியது. மீதி ரூ.8,590 கோடியை ஜப்பான் வங்கி கடன் உதவியை பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு செய்தது.
 
மத்திய அரசு தமிழகத்தின் நலன் சார்ந்து எடுத்த முயற்சிகளின் பயனாகத்தான் சென்னையின் முகத்தையே மாற்றியமைத்து, நவீன நகரமாக உருவாவதற்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருப்பது மிகப்பெரிய வரப் பிரசாதமாகும்.
 
ஆனால் சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களைப் பார்க்கும் போது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10 கி.மீ. தூரத்திற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 
ஆனால் டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் ஆதர்ஷ் நகரில் இருந்து யமுனா நதி வரை உள்ள 17 கி.மீ. தூரத்திற்கு ரூ.19 தான் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்களைப் பார்க்கிறபோது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தென்படுகிறது.
 
இந்த கட்டணத்தை குறைக்கவில்லை என்றால், மெட்ரோ ரயில் திட்டம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே பாழாகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
 
எனவே, சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் உடனடியாக கட்டணக் குறைப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.