பேராசிரியர் பணிக்கு ரூ.60 லட்சம் லஞ்சமா?

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (13:01 IST)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதால் முதல் கட்டமாக நடந்துள்ள நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என சிபி(ஐ)எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ”திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பேராசிரியர் பணியிட நியமனங்களில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், இப்பணியிடங்களுக்காக ரூ. 30 இலட்சத்திலிருந்து ரூ. 60 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இப்பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர் / இணைப் பேராசிரியர் / பேராசிரியர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், 2016 பிப்ரவரியில் துணைவேந்தராக பேரா. பாஸ்கர் பொறுப்பேற்றவுடன் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பும் நடைமுறை துவங்கியது. முதல் கட்ட நியமனங்களில் ஐ.ஐ.டி, எம்.ஐ.டி.எஸ். போன்ற பிற பல கல்வி நிலையங்களில் பயின்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக் குறைந்த நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்கட்ட நியமனங்களுக்கான நேர்காணல் முடிந்தவுடன் அவசரமாக நவம்பர் 2 அன்று ஆட்சிக்குழுவைக் கூட்டி அப்பணியிட நியமனங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நேர்காணலுக்குப் பிறகு அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக நவம்பர் 11 அன்று நடைபெறவிருந்த ஆட்சிக்குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட் டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் பிரிவில் வரும் நியமனங்களில், விண்ணப்பங்கள் வந்தபோதும் நேர்காணல் நடைபெறவில்லை என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. இப்பிரிவுகளில் பேரம் படியவில்லையோ எனவும் பேசப்படுகிறது.

எனவே பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டு முதல் கட்டமாக நடந்துள்ள நியமனங்களை ரத்து செய்வதோடு, அடுத்தடுத்து நடைபெற்றுள்ள நேர்காணல்களையும் ரத்து செய்துவிட்டு ஊழல்மயமான மற்றும் வெளிப்படைத் தன்மையற்ற இந்த நியமனங்களின் மீது பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்திட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்