நடமாடும் கருவூலம் - மறைந்த சண்முகநாதனுக்கு கே.எஸ். அழகிரி இரங்கல்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:02 IST)
கலைஞரின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் மறைவிற்கு கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 
மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். இந்நிலையில் உடல் நலக்குறைவால் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். கடின உழைப்பாளியான சண்முகநாதன், கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் இவரது மறைவிற்கு கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திரு. கோ. சண்முகநாதன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு. கழக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் என்பதால் அன்றைய ஆளுங்கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட பல அடக்குமுறைகளை துணிவுடன் எதிர்த்து நின்றவர். சோதனையான காலத்திலும் அவருக்கு உற்ற துணையாக இருந்தவர்.
 
எந்த கருத்தைப் பற்றியும் அறிய வேண்டுமானாலும் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த இவர், கடும் உழைப்பின் மூலமாக கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக செயல்பட்டவர். சண்முகநாதன் அவர்களை நடமாடும் கருவூலமாக அனைவரும் கருதுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்