சூர்யா முடிந்தால் ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கட்டும்..! – பாஜக கரு.நாகராஜன்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:34 IST)
தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், நீட் சமூக நீதியை நிலைநாட்டுவதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு குறித்த ஆய்வு குழுவை தமிழக அரசு அமைத்ததற்கு எதிராக பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கரு.நாகராஜன் “நீட் தேர்வை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக நயினார் நாகேந்திரன் சட்டசபையில் கூறினார். சட்டரீதியாக என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவதுதானே தவிர ஆய்வு குழு அமைப்பதல்ல. நீட் சமூக நீதியை நிலைநாட்டுகிறது. 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் கூட நீட் நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் மருத்துவராக முடியும்” என கூறியுள்ளார்.

மேலும் நீட் தேர்வு குறித்து உதயநிதி, சூர்யா போன்றோர் கருத்து தெரிவித்திருப்பது குறித்து பேசிய அவர் “உதயநிதி நீட் தேர்வு குறித்து பேசி வருவது அரசியல் சார்பு கொண்டது. சூர்யாவால் முடிந்தால் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கட்டும்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்