இன்று தனது கணவர் நடராஜனை காப்பாற்ற இவ்வளவு முயற்சிகளை செய்யும் சசிகலா அன்று ஜெயலலிதாவை காப்பாற்ற ஏன் முயற்சிக்கவில்லை என கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்த அரசை ஜெயலலிதா தான் உருவாக்கி தந்தார். வேறு யாரும் உருவாக்கி தரவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. மேலும் அவர் தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்பது தொடர்பான விளக்கத்தையும் அளித்துவிட்டார்.
தினகரன் மனசாட்சி பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இன்று நடராஜனுக்காக ஆடும் அந்த தசை, அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது ஆடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஹெலிகாப்டர் வரவழைத்து காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சியையும் செய்கிறார்கள். அன்று ஜெயலலிதாவுக்கு இது போல் செயல்படாதது ஏன்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தமிழகம் முழுவதும் அத்தனை தொண்டர்களும் எத்தனையோ பிராத்தனை செய்தனர். ஆனால் இவர்கள் குடும்பம் ஏதாவது ஒரு பிராத்தனை செய்ததா? என ஜெயக்குமார் சசிகலாவை கடுமையாக சீண்டினார்.