நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி வீட்டில் வருமான வரி சோதனை : பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (13:16 IST)
தமிழக முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல் ஆகியோரின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


 

 
அவர்கள் வீடு மட்டுமில்லாமல் பிரபல வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர் சேதுராமன் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மொத்தம் 40 இடங்களில் இன்று, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
 
இதில் முக்கியமாக, திண்டுக்கல் மாவட்டம் வேம்பார் பட்டியில் உள்ள,  முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனினின் வீடு, மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரின் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சைதை துரைசாமியின் மகன் பல கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை வாங்கியதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றது. அது தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 
 
வருமானத்துறையினரின் இந்த அதிரடி சோதனை, தமிழக அரசியல் புள்ளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்