அண்ணா நினைவாக உருவாக்கப்பட்ட நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்லும் நேரம் வரும் - கருணாநிதி

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (12:56 IST)
அண்ணாவின் நினைவாக உருவாக்கப்பட்ட நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்காலச் சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவு பூர்வமாகச் செழுமைப்படுத்திக்கொள்ள; நீண்ட காலத்திற்கு பயன்படுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை திமுகஆட்சியில் நான் நிர்மாணித்தேன்.
 
அண்ணா நூற்றாண்டு நூலகம்
நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றப்போகிறேன் என்று அறிவித்தார். தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு நீதி மன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமலாகாமல் உள்ளது.
 
அ.திமுக ஆட்சி தொடங்கிய உடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப்போவதாகவும் அறிவித்தார். அது குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு அப்போதே, “இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
 

 
நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வேறு வழியில்லாமல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கழக அரசு தொடங்கிய இடத்திலேயே நடந்து வருகிறது. ஆனால் நூலகத்திற்கு சென்று படிப்போர் முழுமையாக பயன்படுத்த முடியாத அளவிற்கு, முறையாக நடத்தாமல், ஏனோதானோ என்று அலட்சிய உணர்வோடு அ.திமுகஅரசு புறக்கணித்து வருகிறது.
 
மாதம் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். போட்டித் தேர்வுப்பிரிவில் புதிய புத்தகங்களின்றி, பட்டதாரிகள் வருவது குறைந்து விட்டதாம். நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறியுள்ளதாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த லாரி கிளிண்டன் பார்த்து வியந்த 1,500 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி பூட்டிக் கிடக்கிறதாம்.
 
நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் பணியாற்ற ஆட்கள் இல்லை. எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட 500 கேமராக்களின் லென்சுகள் செயலற்று உள்ளன. கணினிகள் இயங்கவில்லை. ஓலைச் சுவடிகளுக்கான தனிப்பிரிவு மாயமாகி விட்டது. புத்தகங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை. வாசிப்பாளர்களின் வருகை நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் என்பது, ஆயிரத்து 200 பேராக குறைந்து விட்டது.
 
இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக திமுகஆட்சியில் எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தனிப்பட்ட ஒரே ஒருவருடைய காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன.
 
“வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்” என எடுத்துச் சொல்லி, தமிழகத்தை தட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணாவின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நூலகத்திற்கே இந்த கதியா?
 
இதனால் மக்கள் கொடுத்த வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைக்கு எல்லாம் காரணமானவர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், தங்களுடைய மனசாட்சிக்காவது பதில் சொல்ல வேண்டிய நேரம் நிச்சயம் வந்தே தீரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.