ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் பணத்தை வாரியிறைப்பதாக அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றன. ஓட்டுக்கு குறைந்தபட்சம் 4000 ரூபாய் வீதம் அளித்து வாக்களர்களையே மலைக்கவைத்து வருகிறது தினகரன் அணி.
ஆனால் இவை அனைத்தையும் முற்றிலுமாக மறுத்து வந்தார் டிடிவி தினகரன். தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் இப்படி பொய் பிரச்சாரம் செய்வதாக சிரித்த முகத்துடனே முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போலவே கூறி வந்தார் தினகரன்.
ஆனால் தற்போது தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டில் சிக்கியுள்ளன. தினகரனுக்கு நேற்று ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் தினகரன் ஆதரவு முக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் குவாரிகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் துணை ராணுவப்படையின் உதவியுடன் அதிரடியாக காலை முதலே வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் எழும்பூரில் உள்ள விடுதி ஒன்றில் நடத்திய சோதனையில் ஆர்கே நகர் தேர்தலுக்கு பணப்பட்டுவாட செய்வதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ரூபாய் 120 கோடி அளவுக்கு பணப்பட்டுவாட செய்வதற்கான திட்டம் இருந்ததாக இந்த ஆவணங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்பிக்கள் வீடு, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.