வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கும் நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக் கடலுக்கு சென்ற பிறகு மழை குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 70 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை இதுவரை பெய்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை ஃபெஞ்சல் புயலுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறி இருப்பதை அடுத்து, சென்னை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.