வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு உள்ளும், நீதிமன்ற வளாகத்திலும் போராட்டம் நடத்தினால், அவர்களின் ‘வழக்கறிஞர்’ தகுதி பறிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், ”நீதிமன்றத்தில் வழக்குகள் அமைதியான முறையில் இடையூன்றி நடத்தப்படவும், தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர் சட்டத்தின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவு 34(1)ன்படி நீதிமன்றம் கீழ்க்கண்ட விதிகளை திருத்தியுள்ளது. இத்திருத்தம் அறிவிப்பாணை வெளியிட்ட நாளிலிருந்து அமலுக்கு வருகிறது. இதன்படி நீதிமன்றத்தின் உள்ளோ, அதன் வளாகத்திலோ வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினாலோ அல்லது முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் அட்டைகளை பிடித்திருந்தாலோ அல்லது எந்த ஒரு நீதிபதியின் மீதும் தங்களது கருத்தை செலுத்த முயன்றாலோ அவர்களை வழக்காடுவதிலிருந்து தடை செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு.
அந்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்திலோ அல்லது கீழ்நிலை நீதிமன்றங்களிலோ நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலம் வரையிலோ அல்லது நிரந்தரமாகவோ வழக்காடுவதற்கு தடை விதிக்கப்படுவர்.
உயர்நீதிமன்றத்தின் முன்பாக எந்த வழக்கறிஞரும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் உயர்நீதிமன்றத்திலும் அல்லது கீழ்நிலை நீதிமன்றங்களிலும் வழக்காடுவதற்கு தடை விதிக்கப்படும்.
முதன்மை நீதிபதியின் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அந்த வழக்கறிஞரை அந்த மாவட்டத்திலுள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்காட முடியாத வகையில் தடை விதிக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு இந்த சட்டத் திருத்தம் அளிக்கிறது.
கீழ்நிலை நீதிமன்றத்தில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கறிஞர்களைப் பொருத்தமட்டிலும், அது குறித்த அறிக்கையை அந்த நீதிமன்றம் முதன்மை நீதிமன்றத்திற்கு அனுப்பும்; முதன்மைநீதிமன்றம் அறிக்கையை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.