கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:
ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக்குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர்.
கியூபா மண்ணின் நெஞ்சம் நிறைந்த அந்தத் தலைவனைப் பற்றியும் அவன் நடத்திய போராட்டத்திற்கு துணை நின்ற தளபதிகளாக இருந்தோர், பொறுமை காத்து பொறுப்பேற்றோர் ஆகிய இவர்களைப் பற்றியும் அந்தக் கியூபா நாட்டின் பெருமை போற்றும் விழா ஒன்று 2006-ம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் சென்னையில் நடைபெற்றபோது, அந்த மாநாட்டில் நான் வழங்கிய கவிதையை தற்போது நினைவூட்டுவதே மறைந்த அந்த மாவீரனுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகும்.
பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் உரித்தாக்குகிறேன்.
கருணாநிதி கவிதை:
உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்!