திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை வயதானவர்களுக்கான விழா என விமர்சித்த பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதுதான் ஆகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலடித்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவும் அவரது சட்டசபை வைர விழா நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை சென்னை எய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து முக்கியமான அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் பாஜக போன்ற சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை. இதனையடுத்து கருணாநிதியின் இந்த வைரவிழா குறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தை சேர்ந்த பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட விழா வைரவிழா அல்ல, வயதானவர்களுக்காக நடத்தப்பட்ட விழா என்று கூறினார்.
இந்நிலையில் இது குறித்து பொன்னாருக்கு பதிலடி கொடுத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று கூறியது பொன்னாரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சொன்ன பொன்னாருக்கு 16 வயது தான் ஆகிறது என கிண்டலடித்தார் மு.க.ஸ்டாலின்.
பொன்னாருக்கு வயது 16 என ஸ்டாலின் கூறியதும் சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். மேலும் பொன்னார் வைரவிழாவை வயதானோவர்களுக்கான விழா என்று சொல்லி மூத்த குடிமக்களை கொச்சைப்படுத்தியுள்ளார் என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் ஸ்டாலின் அடித்த கமெண்டிற்கு நேற்று பதிலடி கொடுத்த பொன்னார் நான் 16 வயது இளைஞன் அல்ல, 61 வயது இளைஞன். வயதை மறைக்க நினைத்திருந்தால் டை அடித்து இருப்பேன். காவிரியில் தமிழகம் உரிமை இழந்ததற்கு கழகங்களின் ஆட்சியே காரணம் என்றார்.