ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2016 (14:07 IST)
வேலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

 
 
திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.  மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மகன் தமிழரசன், மகள் சுகன்யா.
 
தமிழரசன் டிப்ளமோ படித்துள்ளார். சுகன்யா என்ஜினீயரிங் படித்துள்ளார்.  இருவரும் ஓசூரில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது வீடு, காக்கங்கரையில் உள்ள கிராமப்புற சாலையோரம் உள்ளது. வீட்டின் அருகே 2 கடைகளை கட்டி மோகன் வாடகைக்கு விட்டுள்ளார்.ஒரு கடையை அதே பகுதியில் வசிக்கும் ஜான்சி என்பவர் வாடகைக்கு எடுத்து மளிகை கடை வைத்துள்ளார். ஜான்சியின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு காக்கங்கரையில் குடியேறி மளிகை கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.மோகன் குடும்பத்தாரும், ஜான்சி குடும்பத்தாரும் உறவினர்களை போல பழகி வந்தனர். நேற்றிரவு 11 மணி வரை இரு குடும்பத்தினரும் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, மளிகை கடையை பூட்டிவிட்டு ஜான்சி அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
 
மோகன் தனது மனைவி, மகன், மகளுடன் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் மோகன் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. ஜான்சி கடையை திறக்க வந்தார்.அவர், கதவை தட்டி மோகன் குடும்பத்தாரை எழுப்ப சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்படாமல் திறந்திருந்தது. கதவை திறந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மோகன், அவரது மனைவி, மகள் பிணமாக கிடந்தனர்.அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டும் தலையில் கல்லைப்போட்டு நசுக்கியும் கொலை செய்யப்பட்டு இருந்தனர்.
 
மோகனின் மகன் தமிழரசன் பலத்த காயங் களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை போலீசார் திருப்பத்தூர் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த வீடு ரத்த வெள்ளத்தில் மிதந்தது. அதிர்ச்சியுடன் அந்த வீட்டை பொதுமக்கள் திரண்டு பார்வையிட்டனர். சொத்து தகராறா? முன்விரோத பிரச்சினையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம்  என்றும் கூலிப்படை கும்பலை ஏவி மின் ஊழியரின் குடும்பத்தை தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

 
அடுத்த கட்டுரையில்