வயிற்று கட்டிக்கும், கர்ப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சிகிச்சை அளித்த மருத்துவர்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (13:34 IST)
வயிற்றில் இருப்பது கட்டியா அல்லது கர்ப்பம் தரித்துள்ளதா என்று தெரியாமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி (29). இவரது மனைவி அசீனா (28). திருமணமாகி 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அசீனாவிற்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அசீனாவை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மீண்டும் வயிற்று வலியால் அசீனா பாதிக்கப்பட்டுள்ளர். மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது, மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், மாதந்தோறும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கிடையில், வயிற்றில் குழந்தையுடன் கட்டி ஒன்று வளர்வதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டியது இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசீனாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு உள்ளது. அது குழந்தை பேறுக்கான இடுப்பு வலி என்று கருதி அசீனா தனது கணவருடன் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, வயிற்றில் கட்டி தான் வளர்ந்து இருக்கிறது. கர்ப்பம் தரிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறியதால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோபத்துடன் தெரிவித்துள்ள அசீனா, “குழந்தை உள்ளதா? இல்லையா? என்று கூட தெரியாத இவர்கள் எப்படி டாக்டர்களாக பணியாற்ற முடிகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்