இதயம் இடம் மாறியிருந்த பிளஸ் 1 மாணவனுக்கு தொண்டையில் வளர்ந்த சதையை வேலூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை அய்யப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் சுசிலா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித்துக்கு அடிக்கடி தொண்டையில் வலி ஏற்பட்டு வந்தது. சாப்பிடும்போது உணவு விழுங்குவது கடினமாக இருக்குமாம். மேலும் அடிக்கடி சளி தொல்லையும் இருந்துள்ளது. இதற்காக அஜித் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதித்த போது அஜித்துக்கு தொண்டையில் சுமார் 4 செ.மீ. அளவுக்கு சதை வளர்ந்தது தெரியவந்தது.
மேலும் அவருக்கு இதயம் இடதுபுறம் இருப்பதற்கு பதிலாக வலதுபுறம் இருந்தது. அதேபோல் இரைப்பை இடம் மாறி இடது பக்கம் இருந்தது. உலகத்தில் பிறக்கும் 40 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்குமாம்.
இப்படி இதயம் மற்றும் இரைப்பை மாறுதலாகி இருப்பதால், அஜித்துக்கு மூக்கடைப்பு, அடிக்கடி சளிப்பிடித்தல், தொண்டை யில் சதை வளருதல், உடல்எடை கூடாமல் இருப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு ‘கார்ட்டாஜீன்ஸ் சின்ட்ரோம்’ என பெயர்.
இதுபோன்ற பாதிப்பு உடைய குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியாக எந்த ஒரு அறுவை சிகிச்சை செய்வதும் கடினம். அவ்வாறு செய்ய முயற்சித்தால் ஒரு சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும், பக்க விளைவுபாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் அஜித் தொண்டையில் உள்ள சதையை அகற்ற, கண்டிப்பாக ‘டான்சில்’ ஆபரேஷன் செய்யவேண்டும் என டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக இதுபோன்ற குறைபாடுகள் உடைய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் டீன் உஷாசதாசிவம் மேற்பார்வையில், காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறை தலைவர் மதனகோபால் தலைமையில் மருத்துவர்கள் பாரதிமோகன், காளிதாஸ், இளங்கோ, திலகவதி ஆகியோர் சுமார் 15 நிமிடத்தில் அஜித் தொண்டையில் வளர்ந்து வந்த 4 செ.மீ. அளவுடைய சதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இதன்பிறகு அஜித் தற்போது எந்தவித பக்க விளைவுகளும், பாதிப்புகளும் இன்றி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.