ரூ.500 கோடி மோசடி - வங்கிகளில் முறைகேடாக கடன் வாங்கிய அதிகாரிகள் கைது

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (03:00 IST)
போலி ஆவணங்களின் மூலம் வங்கிகளில் ரூ. 500 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் நிதி நிறுவன அதிகாரிகளை பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 

 
ஃபர்ஸ்ட் லீசிங் என்ற நிதி நிறுவனம் போலியான ஆவணங்களின் மூலம் ஐ.டி.பி.ஐ., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
 
இதனடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் மீது பண மோசடி மற்றும் முறைகேடான பணப் பரிமாற்றம் (தடுப்பு) ஆகிய குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 
அண்மையில் இந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பரூக் இரானி என்பவரை கைது செய்து, அவருக்கு சொந்தமான சுமார் 51 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.
 
இந்நிலையில், பரூக் இரானியைப் போலவே தங்களின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக வங்கிகளில் மோசடி செய்ததாக மேற்படி நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் டில்லிராஜ் மற்றும் முன்னாள் நிதி அதிகாரி சிவராமகிருஷ்ணன் ஆகியோரை பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்