திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஞானசேகர் ( 65 ). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஞானசேகர் வீட்டில் இருந்தபோது இரண்டு கார்களில் வந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்து சத்தம் போட்டுள்ளனர்.
அப்படி யாரையும் எனக்கு தெரியாது என கூறி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கதவை தட்டி காலிங் பெல்லை அடித்து கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். இதில் பயந்து போன ஞானசேகர் முசிறி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில், முசிறி அருகே, வெள்ளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் பைக் மெக்கானிக் செந்தில் (40) என்பதும், ஜவேலி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஜே.பி.சண்முகம் என்பதும் தெரியவந்தது. சண்முகம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில், மாவட்ட செயலாளர் ஆகவும், செந்தில் ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சென்றதாக தெரியவந்தது.