சமீபத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஹரியானாவில் பாஜகவும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.