தினகரன், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2017 (15:34 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இந்த தேர்தலில் சசிகலா அணி சார்பாக டிடிவி தினகரன் களமிறங்கினார். ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் களமிறங்கினார்.
 
இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெற்றது. குறிப்பாக தினகரன் சார்பில் ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையில் ஆர்கே நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பி வைத்தனர். தேர்தல் ஆணையம் அதன் பின்னர் ஆர்கே நகர் இடைத்தேர்தலை பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்தது.
 
இந்நிலையில் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சில தகவல்களை பெற்றுள்ளார்.
 
அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
 
ஆனால் இதுவரை அவர்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அந்த வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை நாளை வர உள்ளது.
அடுத்த கட்டுரையில்