பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை! - திருமாவளவன்

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:42 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்,  குடியரசுத்_தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது.

இந்த உரை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

அதில், ''நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது. பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
 
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் பட்ஜெட்டுக்கு முன்பாக நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபு. அந்த உரை ஆளும் அரசால் தான் தயாரித்துத் தரப்படுகிறது என்றாலும், குடியரசுத் தலைவர் என்ற பதவியின் மாண்பையும் கண்ணியத்தையும் காப்பதாகவே அந்த உரை அமைக்கப்படும்.  ஆனால் அந்த மரபுக்கு மாறாக தேர்தல் கூட்டங்களில் தாங்கள் முன்வைக்கும் பொய்களை எல்லாம் கலந்து ஒரு பரப்புரையாகக் குடியரசுத் தலைவர் உரை பாஜக அரசால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது குடியரசுத் தலைவர் என்ற பதவியை அவமதிக்கும் செயலாகும்.
 
பாஜக அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் உண்மைக்கு மாறான தகவல்களாக இருக்கின்றன. நாலு கோடியே 10 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் தகவலே அதற்குச் சான்று.
 
வளர்ச்சி பெற்ற இந்தியாவின் நான்கு தூண்களாக இளைஞர் சக்தி, மகளிர் சக்தி, விவசாயிகள், ஏழை மக்கள் ஆகியோர் விளங்குகிறார்கள் என்றும், அவர்களை அதிகாரப்படுத்துவதற்காக ஓய்வின்றி இந்த அரசு உழைக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஆட்சியில் தான் இளைஞர்கள் அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்படுகின்றனர். 2014 இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபோது வேலையின்மை சதவீதம் 5.4% ஆக இருந்தது. 2023 அக்டோபரில் அது 10.5% ஆக உயர்ந்துவிட்டது என ஃபோர்ப்ஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.  பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 4.45 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு மணி நேரத்தில் 51 முதல் தகவல் அறிக்கைகள் என்ற அளவில் இந்தக் குற்றங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை கூறுகிறது.  
 
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்ததும்,  அதை எதிர்த்துப் போராடி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ததும், அதன் பிறகே அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மை.  ‘விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அதற்காக சட்டம் இயற்றுவேன்’ என்று தேர்தல் வாக்குறுதி தந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே மோடி அரசு 5 ஆண்டுகளை முடித்து விட்டது.
 
வறுமை குறியீட்டில் முன்பு இருந்ததை விட இந்த ஆட்சியில் இந்தியா முன்னேறிவிட்டதாக இந்த அரசு சுய தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், 125 நாடுகளைக் கொண்ட பசியால் வாடுவோரின் அட்டவணையில் ( global hunger index) இந்தியா முன்பு இருந்ததைவிடக் கீழே இறங்கி 111 ஆவது இடத்தில் இருக்கிறது.  அருகாமையில் உள்ள பாகிஸ்தான்,  பங்களாதேஷ் முதலான நாடுகளைவிடக் கீழே இந்தியா சென்றிருக்கிறது என்பது தலைகுனியச் செய்கிறது. 
 
உண்மை நிலை  இவ்வாறு இருக்க ‘இந்த நான்கு தூண்களையும் அதிகாரப் படுத்துவதற்காக பாடுபடுகிறேன்’ என்று இந்த பாஜக அரசு சொல்வது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். 
 
இப்படியான அப்பட்டமான பொய்களை உரையாகத் தயாரித்து அதைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்வது இந்த அரசு குடியரசுத் தலைவரை மதிக்கிறது என்பதன் அடையாளமா? அல்லது, அவமதிக்கிறது என்பதன் அடையாளமா?   
 
ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை. குடியரசுத் தலைவரை அவமதிக்கும் உரை.  இதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்!'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்