’மோடி அரசுக்கு தகுதி இல்லை’ - போட்டு தாக்கும் திருமாவளவன்

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (13:58 IST)
அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையே சிதைக்கும் விதமாக பொருளாதார அவசர நிலையை நடைமுறைப்படுத்திக் கொண்டு அரசியலமைப்புச் சட்ட நாளை கொண்டாடும் தகுதி மோடி அரசுக்கு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


இது குறித்து திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ஏழை-எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் பொருளாதார அவசர நிலையை இன்று நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தாம் உழைத்து ஈட்டிய பணத்தை வாங்குவதற்கு ஒரு நாட்டின் குடிமக்கள் கால்கடுக்க நாள் முழுவதும் வங்கிகளுக்கு எதிரே வரிசையில் காத்திருக்கிற கொடுமை உலகில் ராணுவ சர்வாதிகார ஆட்சிகளில் கூட நடந்ததில்லை.

வரிசையில் காத்திருப்பவர்களிலோ, இந்த பொருளாதார அவசர நிலையால் உயிரிழந்த 47 பேர்களில் ஒருவர் கூட பணக்காரர்கள் இல்லை. இதிலிருந்தே இது கருப்பு பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்பதை அறிய முடியும்.

மோடியின் இந்த நட வடிக்கை துக்ளக் தர்பாரை விட மோசமானது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள். இதனால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம் என உச்சநீதிமன்றமே அச்சம் தெரிவித்திருக்கிறது.

முன்யோசனையற்ற இந்த நடவடிக்கையால் 2016-2017 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதம் ஆக வீழ்ச்சியடையும் என ஆம்பிட் கேபிடல் என்ற நிறுவனம் கணித்திருக்கிறது. 2018-ம் ஆண்டிலும் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என அது கூறியிருக்கிறது.

மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் இவ்வளவாக உருவாகவில்லை. இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் பறிபோகும். விவசாய தொழிலாளர்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் பட்டினி கிடந்து சாகும் நிலை ஏற்படும்.

இந்தியாவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் பொருளாதார தற்சார்பும் அழிக்கப்படுவதால் வல்லரசுகளை சார்ந்தே செயல்படும் நிலைக்கு இந்தியா முழுமையாக தள்ளப்படும். இதனால் இந்தியாவின் இறையான்மையே நெருக்கடிக்கு ஆளாகும். இத்தகைய நெருக்கடிக்கு நாட்டை ஆளாக்கியிருக்கும் மோடி அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை இப்போதைய ஆட்சியாளர்கள் நடத்த முடியாது. எனவே அடுத்து அவர்கள் அதன் மீதுதான் கை வைப்பார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை பறித்து பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்திருக்கும் மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு முயற்சிக்கக் கூடும். விழிப்போடு இருந்து அதை முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் நாளை ‘அரசியலமைப்புச் சட்ட நாள்’ ஆக கடைபிடிப்போம் என மோடி அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. ஒருபுறம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையே சிதைக்கும் விதமாக பொருளாதார அவசர நிலையை நடை முறைப்படுத்திக் கொண்டு இன்னொருபுறம் அரசியலமைப்புச் சட்ட நாளை’ கொண்டாடுவது அம்பேத்காருக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.

எனவே அரசியலமைப்புச் சட்ட நாளை கொண்டாடும் தகுதி மோடி அரசுக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்